சுவிட்சர்லாந்தில் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் கொரோனா இறப்புகள் மிக அதிக எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் தொடர்பில் அமுலில் இருக்கும் ஊரடங்கு நடவடிக்கைகள் படிப்படியாக தளர்த்தப்படும் என அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.

அரசின் இந்த அறிவிப்பை ஜேர்மன் மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மிக உற்சாகத்துடன் வரவேற்ற நிலையில், பிரஞ்சு மொழி பேசும் மக்கள் அமைதி காத்து வருகின்றனர்.
ஜேர்மன் மொழி பேசும் மக்கள் பொருளாதாரம் சார்ந்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் அமைதி காப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அப்பகுதியில் கொரோனா தொடர்பில் நிகழ்ந்த அதிகபடியான இறப்புகளே.
சுவிஸில் பிரஞ்சு மொழி பேசும் 100,000 பேரில் இதுவரை 24.7 இறப்புகள் கொரோனாவால் ஏற்பட்டுள்ளது. டிஸினோ மண்டலத்தில் மட்டும் இது 53.5 என பதிவாகியுள்ளது.
இதற்கு மாறாக, ஜேர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் கொரோனா இறப்பு விகிதம் வெறும் 6.2 மட்டுமே.
ஜெனீவா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஒலிவியா கீசரின் கூற்றுப்படி,
இந்த வேறுபாடுகளுக்கு முக்கிய காரணம் நேரமே என்கிறார். டிஸினோ உள்ளிட்ட பிரஞ்சு மொழி பேசும் பகுதிகளில் கொரோனா பரவல் முன்னரே நிகழ்ந்தது.
ஆனால் ஜேர்மன் மொழி பேசும் பகுதிகளில் கொரோனாவுக்கு தயாராகும் கால இடைவெளி கிடைத்தது என்கிறார் ஒலிவியா.
மேலும், ஜெனீவாவை பொறுத்தமட்டில், பலருக்கும் இத்தாலியுடன் பிறப்பால் நெருக்கம் உள்ளது. மட்டுமின்றி வடக்கு இத்தாலியுடன் தீவிர தொடர்பைக் கொண்டுள்ளனர் என்பதும் கொரோனா பரவ ஒரு காரணியாக இருக்கலாம் என்கிறார் ஜெனீவா மண்டல மருத்துவர் Jacques-André Romand.